Thursday 19 April 2012

அரசு பள்ளிக்கூடங்களில் ஆங்கிலவழி பிரிவுகள் தொடக்கம்: இந்த ஆண்டு புதிதாக 14,349 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி அறிவிப்பு

இந்த ஆண்டு அரசு பள்ளிக்கூடங்களில் புதிதாக 6,768 பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 14,349 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சட்டசபையில் பள்ளிக்கல்வி அமைச்சர் என்.ஆர்.சிவபதி அறிவித்தார்.

பள்ளிக்கல்வி மானிய கோரிக்கை

சட்டசபையில் நேற்று பள்ளி கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அதற்கு பதில் அளித்து பேசும்போது அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறியதாவது:-

பள்ளி கல்வித்துறைக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.14,552 கோடி அளவுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார். மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் தமிழக அரசு அதற்கான விதிமுறைகளை முதல்முதலாக வெளியிட்டது. அதற்காக டெல்லியில் நடந்த மாநாட்டில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி கபில் சிபல் தமிழகத்திற்கு பாராட்டு தெரிவித்தார்.

முப்பருவ முறை அறிமுகம்

வரும் கல்வி ஆண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல், எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழி கல்வி முறையும் கொண்டுவரப்படுகிறது. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

பள்ளி மாணவ-மாணவிகளின் புத்தக சுமையை குறைக்கும் வகையில் முப்பருவ முறை வரும் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில், ஒரு கல்வி ஆண்டு 3 ஆண்டு பருவங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பருவத்திற்கு பாடப்புத்தகங்களும் ஒரே புத்தகமாக வழங்கப்படும். அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 4 செட் இலவச சீருடை, அட்லஸ், ஜியாமெட்ரி பாக்ஸ், காலணிகள் ஆகியவையும் வழங்கப்பட உள்ளன. மேலும், நோட்டுப்புத்தகங்களும் இலவசமாக வழங்கப்படும்.

பாடத்திட்டத்தை மாற்ற வல்லுனர் குழு

இந்த ஆண்டு பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியுள்ள 19 லட்சத்து 67 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு அவர்களின் போட்டோ மற்றும் ரகசிய பாதுகாப்பு குறியீட்டுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். மேல்நிலை கல்வி (பிளஸ்-1, பிளஸ்-2) பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க ஒரு வல்லுனர் குழுவை அமைக்குமாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருக்கிறார்.

இவ்வாறு அமைச்சர் சிவபதி கூறினார்.

இதைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

மாதிரி பள்ளிகள்

* பள்ளிக்கூடத்திற்கு சென்றுவர சரியான போக்குவரத்து வசதி இல்லாத 8 மாவட்டங்களில் உள்ள 361 குடியிருப்புகள், தொலைதூர குடியிருப்புகள், மலைப்பிரதேசங்களில் இருக்கும் 4,857 இடைநின்ற, பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றுவர போக்குவரத்து வசதி செய்துகொடுக்கப்படும். இதற்காக ஒரு குழந்தைக்கு ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் ஒதுக்கப்படும்.

* கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் உள்ள மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கச்செய்யும் வகையில் பின்தங்கிய 26 ஒன்றியங்களில் ரூ.78 கோடி செலவில் தலா ஒரு மாதிரிப்பள்ளி அமைக்கப்படும். இதன்மூலம் 14,560 பேருக்கு தரமான கல்வி கிடைக்கும்.

* இந்த ஆண்டு 10 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இந்த பள்ளிகளுக்கு 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், பொருளாதாரம், வணிகவியல்) வீதம் மொத்தம் 900 பணி இடங்கள் வழங்கப்படும்.

ஆங்கில பிரிவுகள் தொடக்கம்

* எதிர்கால வாழ்வுக்கு ஆங்கிலவழி கல்வி அத்தியாவசியமாக இருப்பதால், கிராமப்புற பகுதிகளில் படிக்கும் மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்தும் வகையில் வரும் கல்வி ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்பில் தலா 2 ஆங்கிலவழி பிரிவுகள் தொடங்கப்படும். படிப்படியாக 12-ம் வகுப்பு வரை ஆங்கிலவழி பிரிவுகள் நடத்தப்படும். முதல்கட்டமாக வரும் கல்வி ஆண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 அரசு பள்ளிகள் வீதம் 320 பள்ளிகளில் தலா 2 ஆங்கில பிரிவுகள் தொடங்கப்படும். இதன்மூலம் 22,400 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

நடமாடும் கவுன்சிலிங் மையங்கள்

* பள்ளி மாணவ-மாணவிகளின் மனக்கலக்கம், மனச்சோர்வு, மனஅழுத்தம், மனக்குழப்பம் போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ரூ.3 கோடி செலவில் 10 நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்படும்.

* அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு உயிரி-வேதியியல், நுண்ணுயிரியல் பாடங்களுக்கு முதுகலை ஆசிரியர் பணி இடங்கள் அனுமதிக்கப்படும்.

14,349 ஆசிரியர்கள் நியமனம்

* இந்த ஆண்டு அரசு பள்ளிக்கூடங்களில் புதிதாக 14,349 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆசிரியர் இடங்களின் எண்ணிக்கை நிலை வாரியாக கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 396

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் - 617

முதுகலை பட்டதாரி ஆசிரியர் - 2,312

பட்டதாரி ஆசிரியர் - 6,768

இடைநிலை ஆசிரியர் - 3,433

சிறப்பு ஆசிரியர் (தையல், ஓவியம், உடற்கல்வி போன்றவை) - 823

அரசு பள்ளிகளில் 4,393 ஆய்வக உதவியாளர், 2,282 இளநிலை உதவியாளர், 79 தட்டச்சர் உள்பட 6,786 ஆசிரியர் அல்லாத காலி பணி இடங்கள் நிரப்பப்படும்.

உதவி தொடக்கக்கல்வி அதிகாரி

* மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 64 இளநிலை விரிவுரையாளர் பணி இடங்களும், 24 நூலகர் பணியிடங்களும் நிரப்பப்படும்.

* தொடக்கக்கல்வி துறையில் புதிதாக 40 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

* ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் திருச்சியில் புதிதாக ஆசிரியர் இல்லம் கட்டப்படும்.

* ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 பகுதிநேர நூலகங்கள் வீதம் 160 பகுதிநேர நூலகங்கள், 3 ஊர்ப்புற நூலகங்கள் வீதம் 96 ஊர்ப்புற நூலகங்கள் கிளை நூலகங்களாக தரம் உயர்த்தப்படும்.

தனியார் பள்ளிகளுக்கு பொது விதிகள்

தனியார் பள்ளிகளுக்கு பொதுவான சட்டம் மற்றும் விதிமுறைகளை உருவாக்க வல்லுனர் குழு அமைக்கப்படும். அதேபோல், தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதி மற்றும் அங்கீகாரம் வழங்குவதற்கான குறைந்தபட்ச இடவசதி நிர்ணயிக்கவும் ஒரு வல்லுனர் குழு அமைக்கப்படும்

மேற்கண்ட அறிவிப்புகளை அமைச்சர் என்.ஆர்.சிவபதி வெளியிட்டார்.

No comments:

Post a Comment

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...